×

திருமயம், அரிமளம் பகுதியில் ஆறு, கண்மாய்களை பராமரிப்பதில் பொதுப்பணித்துறை அலட்சியம்: விரைவில் சீரமைக்க கோரிக்கை

திருமயம்: திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள ஆறு, கண்மாய்களை பராமரிப்பதில் அலட்சியம் காட்டும் பொதுப்பணி துறை, சேதமடைந்த அணைக்கட்டுகள், கரைகள், தூர்ந்து போன கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் தெற்கு வௌ்ளாறு, பாம்பாறு திருமயம், அரிமளம் பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதில் கடைசியாக கடந்த 2012ம் பெய்த மழையின் போது குறிப்பிட தகுந்த அளவு தண்ணீர் ஆற்றில் ஓடியது. அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் தொடர் வறட்சி காரணமாக வௌ்ளாறு, பாம்பாறு உட்பட அனைத்து ஆறுகளும் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக வறட்சியையே சந்தித்து வருகிறது. இதனிடையே நடப்பாண்டு அரிமளம், திருமயம் பகுதியில் பெய்த பருவ மழையால் ஆற்றில் தொடர்ச்சியாக நீர் செல்லாவிட்டாலும் ஆறுகளில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கிறது. அதே சமயம் ஆறுகளில் இருந்து நீர் பாசன கண்மாய்க்கு நீர் செல்லாததால் திருமயம், அரிமளம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்காக ஏக்கரில் நடைபெற்று வந்த விவசாயம் முற்றிலும் முடங்கி குறிப்பிட்ட சில ஏக்கர்களில் மட்டுமே விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாய பயிர்கள் கருகுவதால் எதிர்வரும் காலங்களில் திருமயம், அரிமளம் பகுதி விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்ய அஞ்சுகின்றனர். இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் அரிமளம் பகுதிகளில் விவசாயம் என்பது கேள்விகுறியாகிவிடும் என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெபிவித்தனர்.

திருமயம், அரிமளம் பகுதியில் பாம்பாறு, வௌ்ளாறு பாய்ந்தாலும் விவசாயத்திற்கு அப்பகுதி விவசாயிகள் கண்மாய் பாசனத்தையே முழுமையாக நம்பி உள்ளனர். இந்நிலையில் மழைக்காலங்களில் பாம்பாறு, வௌ்ளாற்றில் வரும் நீரை அணைகள் மூலம் தடுத்து அந்த நீரை கண்மாயில் நிரப்பி விவசாயம், குடிநீருக்கு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். பாம்பாறு, வௌ்ளாறுகளில் குறுக்கே போதுமான தடுப்பணைகள் இல்லாத நிலையில் அப்பகுதி விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அணைகட்ட முன்னோர்கள் விடுத்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 50 ஆண்டுகளுக்கு முன் திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள ஆறுகளின் குறுக்கே 5க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டது. 15 வருடங்களுக்கு முன் பருவம் தவறாமல் பெய்யும் மழையால் அணைகள், ஆற்றங்கரைகள், நீர்வரத்து வாரிகள் பராமரிக்கப்பட்ட நிலையில் கடந்தசில ஆண்டுகளாக மழையில்லாமல் ஆறுகள் வறண்டு போயின. இதனால் பாம்பாறு, வௌ்ளாறு அணையில் இருந்து விவசாய கண்மாய்க்கு நீர் செல்லும் கால்வாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, கால்வாய் உட்பகுதியில் கருவேல மரங்கள் புதர் செடிகள் மண்டி காடு போல் காட்சியளிப்பதோடு பெரும்பகுதி கரைகள் உடைந்து சேதமடைந்து உள்ளது. மேலும் அணைகட்டுகள், மதகுகள் பராமரிப்பின்றி சேதமடைந்து வருவதால் எதிர்வரும் காலங்களில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாம்பாறு, வௌ்ளாற்றில் உள்ள தடுப்பணைகள் அனைத்தும் வௌ்ள நீரில் அடித்து செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே சமயம் ஆற்றில் உட்பகுதி, கண்மாய்க்கு நீர் செல்லும் வரத்துவாரிகள் முட்புதர்களால் அடைபட்டுள்ளது. இதனால் கண்மாய்களில் நீர் சேகரித்து விவசாயம் செய்வதில் சிரமம் உள்ளது.

இந்நிலையில் இதனை பாதுகாத்து பராமரிக்க வேண்டி பொதுப்பணித்துறையும் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள ஆற்றில் தடுப்பணைகளை பராமரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, ஆற்றில் இருந்து கண்மாய்க்கு நீர் செல்லும் கால்வாய் சேதங்களை சரி செய்து, தூர் வார நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.இது அரிமளம் விவசாயி அடைக்கப்னிடம் கேட்டபோது,ஒரு காலத்தில் மழை நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்த அரிமளம் பகுதி விவசாயிகளுக்கு வௌ்ளாற்று குறுக்கே கட்டப்பட்ட அணை மூலம் போதுமான நீர் கிடைத்ததால் இருபோக விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது வறட்சியால் ஆறுகள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்ததால் ஒரு போக விவசாயத்திற்கு நீர் கிடைப்பதே குதிரை கொம்பாகி போய்விட்டது. தொடர் வறட்சியினால் ஆறு, நீர் வரத்து வாரிகள், கண்மாய்களை பராமரிப்பதில் யாரும் அக்கரை காட்டவில்லை.
எனவே திருமயம் பகுதி வௌ்ளாறு, பாம்பாற்றில் உள்ள அனைத்து தடுப்பணைகள், கரைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வெண்டும் என்றார்.



Tags : Public Works Department ,river ,area ,mantle ,Arimalam ,Thirumayam , six blinds , Thirumayam, Arimalam ,revision soon
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில்...